சொத்து தகராறில் தம்பி மகன் கொலை: தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

கும்பகோணம் அருகே சொத்து தகராறில் தம்பி மகனை கொன்ற தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2018-07-17 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏனநல்லூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் புகழேந்தி(வயது 25). ஆட்டோ டிரைவர். சீனிவாசனின் அண்ணன் நாகப்பன்(57). இவருடைய மகன் பாலமுருகன்(30). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். சீனிவாசன் குடும்பத்துக்கும், நாகப்பன் குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி சீனிவாசன் குடும்பத்தினருக்கும், நாகப்பன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நாகப்பனும் அவரது மகன் பாலமுருகனும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் புகழேந்தியை தாக்கினர். இதில் படுகாயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பன் அவருடைய மகன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

நீதிபதி செம்மல், புகழேந்தியை கொலை செய்த நாகப்பன் மற்றும் அவருடைய மகன் பாலமுருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் நாகப்பன், அவருடைய மகன் பாலமுருகன் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்