வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் நெரிசல்
வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் நெரிசல் நிலவி வருகிறது.
சென்னை,
அதிநவீன மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்கள், நோயாளிகளின் உதவிக்காக என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
டாக்டர்கள், நர்சுகள், ஒப்பந்த ஊழியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலானோர் வாகனங்களை கொண்டு வருவதால் நிறுத்துவதற்கு இடம் இன்றி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகம் இட நெருக்கடியால் சிக்கி தவிக்கிறது. இதனால் வாகனங்கள் அங்கும், இங்குமாக மனம் போன போக்கில் நிறுத்தப்படுகின்றன.
ஆம்புலன்சுக்கு இடையூறு
மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பிரத்யேகமாக வசதி எதுவும் செய்யப்படவில்லை. பிரதான நுழைவு வாயிலில் இருந்து கட்டிடம்-1, கட்டிடம்-2 ஆகியவற்றின் முன்பு ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவலாளிகளும் அங்கு பணி அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.
கட்டிடம்-1, கட்டிடம்-2 ஆகியவற்றின் பின்னால் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுவிடுகின்றன. வாகனங்கள் வரிசை இல்லாமல் நிறுத்தப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியே செல்லும் பாதையில் இடையூறு ஏற்படுகிறது.
சிரமம்
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் நலம் விசாரிக்க வரும் பார்வையாளர்கள் தங்களுடைய வாகனங்களை கண்ட இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இவர்களுக்கு தான் இடம் இல்லை, இப்படி நிறுத்துகிறார்கள் என்றால், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்களோ தாங்கள் வரும் கார்களை மருத்துவமனை கட்டிடத்தின் நுழைவுவாயிலின் அருகாமையில் அப்படியே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
வாகனங்கள் வரைமுறைப்படுத்தப்படாமல் நிறுத்தப்படுவதால், நோயாளிகளை ஸ்டிரெச்சரில் வைத்து ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு கொண்டு செல்வதற்கு மருத்துவ உதவியாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். டாக்டர்களின் வாகனங்களை நிறுத்த பிரத்யேகமாக வாகன நிறுத்தும் இடங்கள் இருக்கிறது. ஆனால் சிலர் அதை பயன்படுத்தாமல், வாகன நிறுத்தத்துக்கு என்று ஒதுக்கப்படாத இடத்திலேயே நிறுத்துகின்றனர்.
வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா?
சென்னை மருத்துவக்கல்லூரியின் பழைய கட்டிடத்துக்கு பின்புறம் இருக்கும் மைதானத்தில் வாகனம் நிறுத்துவதற்கான இட வசதியை ஏற்படுத்தினால், நோயாளிகளின் உறவினர்கள், டாக்டர்கள் அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை ஸ்டிரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லவும் மருத்துவ உதவியாளர்களுக்கு எளிதாக இருக்கும்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வாக அமையும். இதன்மூலம் நோயாளிகள், பார்வையாளர்கள் படும் அவதியை குறைக்க முடியும். எனவே வாகன நிறுத்தம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக செய்யவேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.