மோட்டார்சைக்கிள் திருடியதாக வடமாநில முதியவருக்கு அடி, உதை சிறுவனும் தாக்கப்பட்டதால் பரபரப்பு

மோட்டார்சைக்கிள் திருடியதாக வடமாநில முதியவரை சிலர் அடித்து, உதைத்தனர். மேலும் சிறுவனும் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-16 22:15 GMT
வேலூர்,


வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் தற்காலிக குடிசைகள் அமைத்து வேலூர் மாநகர் பகுதிகளில் தேன், மெத்தை, இயற்கை மருந்துகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்மொணவூர் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரின் மோட்டார்சைக்கிள் திருட்டுபோனது. இந்தநிலையில் அங்கு தங்கியிருக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த மோட்டார்சைக்கிளை திருடி இருப்பார்கள் என்று தகவல் அப்பகுதியில் பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர், வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்று சந்தேகத்தின் பெயரில் ஒரு முதியவரை அடித்து, உதைத்தனர். மேலும் அவரது 10 வயதுடைய சிறுவனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வடமாநிலத்தவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறினர். அவர்களும் தங்களது தற்காலிக குடிசைகளை காலி செய்து, வேறு இடம் தேடிச் சென்றனர்.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த பகுதியில் பீகார், மேற்குவங்காளம் போன்ற வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வந்து 2 மாதங்கள் தற்காலிக குடிசைகள் அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்வார்கள். இவர்களை மோட்டார்சைக்கிள் திருடுபவர்கள் என கருதி அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்கினர். மேலும் இங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அவர்களின் குடிசைகளை அகற்ற கூறினோம் என்றனர்.

மேலும் செய்திகள்