ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2018-07-16 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, மக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சிறு, குறு, தொழிலாளர்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது;-

நாங்கள் தூத்துக்குடி நகரில் பல வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் மற்றும் அதனை சார்ந்த சிறு, குறு தொழில்கள் செய்து வருகிறோம். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தினசரி தாமிர தாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி, தாது மணல், அமிலங்கள் போன்ற பொருட்கள் கையாள பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனை நம்பி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மெக்கானிக் வேலை செய்பவர்கள், பஞ்சர் ஒட்டுபவர்கள், லாரிக்கு பெயின்ட் அடிப்போர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தேவையில்லாத பொய் பிரசாரத்தினாலும், வதந்திகளாலும், போராட்டங்களாலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த பல சிறு, குறு தொழில்கள் அனைத்தும் நலிவடைய தொடங்கி உள்ளது. நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வங்கி கடன் தவணையை செலுத்த முடியாமலும், மாத வருமானம் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியாமலும், மருத்துவ மற்றும் அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கியும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

பல ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வரும் நாங்கள் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறோம். ஆனால் வதந்திகளால் மக்களின் உணர்வு தூண்டப்பட்டு ஆலை மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எங்கள் வாழ்வாதாரம் மீண்டும் மலர ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர். 

மேலும் செய்திகள்