பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யவும் ஏற்பாடு

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. அந்தந்த பள்ளிகளில் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Update: 2018-07-16 23:15 GMT
வேலூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. மாணவ-மாணவிகளின் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 16-ந் தேதி அந்தந்த பள்ளிகளில் வினியோகம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி வேலூர் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டன. அங்கிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்த நிலையில் நேற்று முதல் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதேபோல் தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் அசல் சான்றிதழ் வழங்கப்பட்டன.

மேலும் மாணவ-மாணவிகள் தங்களது சான்றிதழ்களை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு பதிலாக அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வருகிற 30-ந் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்