அரசு பள்ளி அருகில் போதைப்பொருட்கள் விற்பனை; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு
அரசு பள்ளி அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விடுமுறை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 235 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுவரில் சாதி ரீதியான வாசகங்களும், வன்மம் நிறைந்த வாசகங்களையும் யாரோ சிலர் எழுதி வைத்துள்ளனர். பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சாதி ரீதியாக பிளவுபட்டு தாக்கிக் கொள்கின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள நகராட்சி பூங்காவில் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் நடந்து வருகிறது. எனவே அரசு பள்ளிகளை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வி நிர்வாகமும் இணைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பெரியகுளம் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘பெரியகுளம் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு ஓட்டுகின்றனர். இதனால், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.