பரமக்குடி அருகே குடிநீருக்கு தவம் கிடக்கும் கிராம மக்கள், கசிவுநீரை சேகரித்து பயன்படுத்தும் அவலம்

பரமக்குடி அருகே குடிநீருக்கு தவம் கிடக்கும் கிராம மக்கள் கசிவுநீரை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

Update: 2018-07-16 22:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சி மற்றம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. இதனால் பரமக்குடி பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றொரு பகுதிக்கு தண்ணீர் எடுக்க சென்றாலும் அங்குள்ளவர்கள் எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது எனக்கூறி வாக்குவாதம் செய்கின்றனர்.

இதனால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட வேந்தோணி ஊராட்சியில் உள்ள தொட்டிச்சியம்மன் காலனி, அம்மன் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் குடிநீர் கிடைக்காததால் உப்புநீருக்கே மணிக்கணக்கில் தவம் கிடக்கின்றனர். வேறு வழியின்றி ஆங்காங்கே கசிந்து வரும் நீரை குடங்களில் சேகரித்து செல்கின்றனர்.

இந்த சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இருப்பினும் வேறு வழியில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்