கச்சத்தீவில் கரை ஒதுங்கிய மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை
கச்சத்தீவில் கரை ஒதுங்கிய 2 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரையில் இருந்து கடந்த 15–ந்தேதி தெர்மாகோல் படகு மூலம் கனவாய் பிடிப்பதற்காக வினோத்(வயது18), காளிமுத்து (25) ஆகியோர் கடலுக்கு சென்றனர். பலத்த காற்றின் காரணமாக இவர்கள் சென்ற தெர்மாகோல் படகு கச்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் அவர்கள் 2 நாட்களாக அங்கேயே இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அந்த வழியாக இலங்கை கடற்படை கப்பல் ரோந்து வந்துள்ளது. கச்சத்தீவில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை கண்டதும் அங்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் நடந்த விவரங்களை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து 2 மீனவர்களையும், தெர்மாகோல் படகையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.