தொண்டியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் 4 மீனவர்கள் கைது

தொண்டியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-07-16 21:45 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நாரேந்தல் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் மகன் ராஜேசுவரன் (வயது 26). இவருக்கு சொந்தமான நாட்டு படகில் அதே ஊரைச்சேர்ந்த பொன்னையா மகன் மணி (42), புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மரிய செங்கோல் மகன் சிந்தாதிரை (35), காரங்காடு கிராமத்தில் வசித்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த குப்பு மகன் காளிதாஸ் (34) ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் கேக்கெடிவை தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த படகை கண்டதும் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இதில் இருந்த மீனவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்களாம். இதையடுத்து அந்த படகை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். அப்போது அதில் 14 பொட்டலங்களில் 37 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து கஞ்சாவையும், படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் இதுதொடர்பாக 4 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்திஉள்ளனர்.

இந்த விசாரணையில் தமிழக கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்தி வந்து நடுக்கடலில் வைத்து தலைமன்னாரை சேர்ந்த கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க இருந்ததாகவும், அந்த சமயத்தில் இலங்கை கடற்படையினர் ரோந்து வருவதை அறிந்ததும் இலங்கையில் இருந்து வந்த கடத்தல்காரர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்காமல் தப்பிச்சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து ஊர்க்காவல்துறை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இலங்கை கடற்படை அதிகாரிகள் கூறும்போது, பிடிபட்ட கஞ்சா கேரளாவில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சமாகும். கடந்த 2017–ம் ஆண்டு 950 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 510 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கடத்தலை தடுக்க சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்