தேர்தல் பணிகளை தி.மு.க.வினர் தொடங்க வேண்டும், மூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு

தேர்தல் பணிகளை தி.மு.க.வினர் தொடங்க வேண்டும் என்று மூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2018-07-16 22:45 GMT

மதுரை,

மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். கட்சியின் பார்வையாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் இன்பசேகரன், ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர்.

அப்போது அவர்கள், ‘‘பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் மாவட்டங்களில் கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்படும் கமிட்டியில் 20 பேர் இடம் பெறுவார்கள். அதில் 5 மகளிர், 5 இளைஞரணியினர் கட்டாயம் இடம் பெறுவார்கள். மேலும் கமிட்டியில் இடம் பெறும் அனைவரும் அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும்‘‘ என்றனர்.

மாவட்ட செயலாளர் மூர்த்தி பேசும் போது, ‘‘வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் கமிட்டி அமைக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும். தேர்தல் விரைவில் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். கடந்த கால தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், அ.தி.மு.க. அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்‘‘ என்றார்.

மேலும் செய்திகள்