கடலூரில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்
மணல் குவாரிகளை திறக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 182 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மாட்டு வண்டி மணல் குவாரிகளையும் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த போவதாக கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) அறிவித்து இருந்தனர். மேலும் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து பேரணியாக சென்று இந்த போராட்டத்தை நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து காலை 11 மணி அளவில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். பேரணிக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் கருப்பையன், மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிர்வாகிகள் செல்வராஜ், பரணி, விஸ்வநாதன், அசோக் உள்பட கடலூர், பண்ருட்டி வட்டார மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு பேரணியில் சென்றனர்.
அவர்கள் சிறிது தூரம் சென்ற நிலையில், கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்துக்கு அனுமதி கிடையாது. ஆகவே உங்களை கைது செய்கிறோம் என்றனர். இதையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடலூர்- புதுச்சேரி மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வானமாதேவி, விலங்கல்பட்டு, சன்னியாசிப்பேட்டை, எலந்தம்பட்டு, சிறுவத்தூர், எனதிரிமங்கலம், அக்கடவல்லி, ஆயிப்பேட்டை, மிராலூர், இளமங்கலம், திட்டக்குடி, கீழ்செருவாய் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் திட்டமிட்டே குவாரிகளை திறக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். மாட்டு வண்டி தொழிலை திருட்டு தொழிலாக சித்தரித்து முடக்க முயற்சி செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி கோஷமிட்டனர்.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். அப்போது அந்த வழியாக மாணவர்களை இறக்கி விட்டு வந்த பள்ளிக்கூட வேனிலும் போராட்டக்காரர் களை போலீசார் வலுக்கட்டாயமாக ஏற்றி, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் மொத்தம் 182 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தபோது, புதுச்சேரி சாலை வழியாக அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் தண்டபாணியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதை பார்த்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, கலெக்டரின் காரை அனுப்பி வைத்தனர்.
இந்த போராட்டத்தால் மஞ்சக்குப்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.