பலத்த காற்றுடன் தொடரும் கனமழை: ஊட்டியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டியில் பலத்த காற்றுடன் தொடரும் கனமழையால், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படகு சவாரி நிறுத்தப்பட்டது.

Update: 2018-07-16 22:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்றும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஊட்டி படகு இல்ல சாலையில் மரம் ஒன்று வேருடன் முறிந்து மின் ஒயர்கள் மீது விழுந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் மின்கம்பம் முழுமையாக வளைந்து தரையில் கிடக்கிறது. மேலும் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. உடனே அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் தலைமையிலான பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை மின்வாள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இது தவிர ஊட்டி–கூடலூர் சாலையில் பிங்கர்போஸ்ட் பகுதி, தலைகுந்தா, சோலூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மூன்று மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். இது குறித்து மேலும் அதிகாரிகள் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நிலம் எப்போதும் ஈரப்பதமாகவே காணப்படுகிறது. அதன் காரணமாக வேர்ப்பகுதியில் மண்பிடிப்பு இல்லாமல் மரங்கள் விழுகின்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதில் கடந்த 2 நாட்களில் ஊட்டி, தலைகுந்தா, ஓரசோலை, மஞ்சூர் அருகே கைக்காட்டி, கீழ் கோத்தகிரி, நடுஹட்டி, அறைஹட்டி, குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் 33 மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இந்த மரங்களை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாசில்தார்கள் தலைமையில் பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் வெட்டி அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி முதல் குஞ்சப்பனை சோதனைச்சாவடி வரை சாலையில் விழுந்த மரங்களை கோத்தகிரி தாசில்தார் தலைமையில் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 174 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 354 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 206 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நேற்று வரை 250 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் ஊட்டி நகராட்சியில் சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள் மீது மரங்கள், மரக்கிளைகள் விழுந்து வருகின்றன. இதனால் ஊட்டி நகரில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் குடிநீர் இருந்தும், பல வார்டுகளில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஊட்டியில் கனமழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மழையால் அந்த படகுகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. ஊட்டி படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைப்பிடித்தபடி நடந்து சென்றனர். மேலும் அவர்கள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–

கூடலூர்–42, குந்தா–15, கேத்தி–7, கோத்தகிரி–3, நடுவட்டம்–46, ஊட்டி–34, கல்லட்டி–33, கிளன்மார்கன்–34, அப்பர்பவானி–100, எமரால்டு–29, அவலாஞ்சி–97, கிண்ணக்கொரை–2, கோடநாடு–16, தேவாலா–54 என மொத்தம் 512 மழை பதிவாகி உள்ளது. இது 30.12 சராசரி ஆகும். ஊட்டியில் பெய்து வரும் மழையால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் தொழிலாளர்கள், பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர்.

தொடர் மழை காரணமாக நீலகிரியில் அபாயகரமாக உள்ள இடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதில் ஊட்டி தாலுகாவில் 48 இடங்கள், குந்தா தாலுகாவில் 42 இடங்கள், குன்னூர் தாலுகாவில் 64 இடங்கள், கோத்தகிரி தாலுகாவில் 64 இடங்கள், கூடலூர் தாலுகாவில் 5 இடங்கள், பந்தலூர் தாலுகாவில் 10 இடங்கள் என மொத்தம் 233 இடங்கள் ஆகும். அதன்படி, ஊட்டி நகரில் எல்க்ஹில், நொண்டிமேடு, தலையாட்டுமந்து, வேலிவியூ அண்ணாநகர், புதுமந்து, ராயல் கேசில், மேரிஸ்ஹில், கோடப்பமந்து, முள்ளிக்கொரை ஆகிய 9 இடங்கள் மழையால் நிலச்சரிவு ஏற்படக்கூடியதாகவும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மிக அதிகமாக மழை பெய்யும் போது, அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்