போலி சான்றிதழ் தயாரித்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகத்தின் காதலியிடம் போலீசார் விசாரணை

போலி சான்றிதழ் தயாரித்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகத்தின் காதலியிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இல்லை என்பதால் போலீசார் அவரை விடுவித்தனர்.

Update: 2018-07-16 23:00 GMT

கோவை,

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம், விராலியூரில் இருக்கும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின்போது 2–வது மாடியில் இருந்து கீழே விரிக்கப்பட்டு இருந்த வலையில் குதிக்க தயங்கிய மாணவி லோகேஸ்வரியை (வயது 19), பயிற்சியாளர் ஆறுமுகம் (31) கீழே தள்ளிவிட்டார்.

அதில் முதலாவது மாடியில் உள்ள ‌ஷன் சேடில் அந்த மாணவியின் தலை மோதியதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது தெரிந்தே மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அத்துடன் போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகம் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்த எவ்வித பயிற்சியும் பெறவில்லை என்பதும், போலி சான்றிதழ் தயாரித்து பள்ளி, கல்லூரிகளிடம் கொடுத்து பயிற்சி நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர் மீது கூடுதலாக மோசடி செய்தல் என்ற பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக சிலரின் பெயர்களை ஆறுமுகம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:–

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகம் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டார். இவருக்கு ஒரு சகோதரி, ஒரு தம்பி ஆகியோர் உள்ளனர். சகோதரிக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். தம்பி, நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட ஆறுமுகம், வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்தார்.

போலியோவால் பாதிக்கப்பட்ட அவரால் நீண்டநேரம் நிற்க முடியாது என்பதால், அவரால் அங்கு மேற்கொண்டு வேலைசெய்ய முடியவில்லை. இதையடுத்து நாகர்கோவிலை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஒரு பள்ளியில் வார்டனாக வேலை செய்தார். அதன் பின்னர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றினார். அப்போது அந்த பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுத்ததை பார்த்து பயிற்சி எப்படி கொடுக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

இந்த பயிற்சியை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நடத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால், அந்த பயிற்சியை நடத்த முடிவு செய்தார். இதற்கான சான்றிதழை தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் போலியாக தயாரித்தார். பிறகு அதை வைத்து பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி நடத்தி பணம் சம்பாதித்தார். இதை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்றார். அங்குள்ள மாம்பாக்கத்தில் அலுவலகம் தொடங்கினார். அதன் அருகிலேயே வீடு எடுத்து தங்கினார்.

பின்னர் பல மாவட்டங்களுக்கு சென்று பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சியை நடத்தினார். இது தொடர்பாக அவருடைய தம்பி, சகோதரியிடம் விசாரணை நடத்தியதில், அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. அதுபோன்று நாகர்கோவிலில் ஒரு நர்சிங் கல்லூரியில் பயிற்சி கொடுத்தபோது ஒரு மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

தற்போது அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். எனவே அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்ததில் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு நன்றாக ஒத்துழைத்த அவர், ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரித்தது எதுவுமே தனக்கு தெரியாது என்றும், அவரை பற்றி தெரியாமல் நான் காதலித்துவிட்டேன் என்று தேம்பி, தேம்பி அழுதார்.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆறுமுகம் போலி சான்றிதழ் தயாரித்ததில், அவருக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்பது தெளிவாக தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தின் காதலியை விடுவித்ததுடன், தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்.

ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததும் சென்னை அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்