பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கும் பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை பெற்ற மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்தனர்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டன.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 391 மாணவர்களும், 20 ஆயிரத்து 148 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 539 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 15 ஆயிரத்து 129 மாணவர்களும், 17 ஆயிரத்து 826 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பிற்கு எந்தவித சிரமமும் இன்றி முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏதுவாக ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், நேற்று அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக மாணவ- மாணவிகள் அனைவரும் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றனர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றனர்.
மேலும் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறும் மாணவ- மாணவிகள் வேலைவாய்ப்புக்கு சிரமமின்றி பதிவு செய்ய வசதியாக, ஆன்-லைன் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பெரும்பாலான மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்தனர்.