1 மாதமாக குடிநீர் சரிவர வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
1 மாதமாக குடிநீர் சரிவர வராததை கண்டித்து தஞ்சை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இந்த தெருவில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 1 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சரிவர தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் அன்றாடம் தண்ணீருக்காக அலைந்த வண்ணம் இருந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை– பட்டுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
தஞ்சை– பட்டுக்கோட்டை சாலையில் இந்த மறியல் போராட்டம் நடந்ததால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்ட பின்னர் போக்குவரத்து சீரானது.