“தமிழகம் ஊழல் மையமாக மாறிவிட்டது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

‘‘தமிழகம் ஊழல் மையமாக மாறிவிட்டது. எனது கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும்’’ என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-07-16 23:15 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளித்தபோது ‘முட்டை வினியோக ஊழல் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறினேன்.

‘தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்’ என்பதைத்தான் ‘மொட்டை அடிக்கப்படுகிறார்கள்’ என்றேன். எனவே நான் பேசியதன் கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும்.

தமிழகம் ஊழல் மையமாக மாறிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் உறுதியாக அமையும். மீன்பிடி துறைமுகம் கொண்டுவரவும், மீன்களை ஏற்றுமதி செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்