சலவை பட்டறை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் சலவை பட்டறை உரிமையாளர் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-07-15 23:30 GMT
ஈரோடு, 

பவானி அருகே உள்ள எலவுமலை ஓடைப்பள்ளம் பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ‘அவர் பவானி அருகே ஆர்.என்.புதூர் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திமணாளன் (வயது 44). சலவைப்பட்டறை உரிமையாளர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதும்,’ தெரியவந்தது.

இதேபோல் சத்தியமங்கலத்தை அடுத்த தோரணப்பள்ளம் அருகே ஆண் பிணம் கிடப்பதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் இடத்தின் அருகில் விஷ பாட்டில் ஒன்றும் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராக்கியாபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 49). நெசவு தொழிலாளி. இவருடைய மகள் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வந்து உள்ளார். இதேபோல் சம்பவத்தன்று சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்த அவர், அங்கு சாமி கும்பிட்டு உள்ளார். பின்னர் அருகில் உள்ள தோரணப்பள்ளம் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது,’ தெரியவந்தது.

கவுந்தப்பாடி அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் எம்.வீரக்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் வீரக்குமார் மனமுடைந்து சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்