கர்நாடகத்தில் 50 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர்

கர்நாடகத்தில் 50 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக மந்திரி சிவானந்தபட்டீல் கூறினார்.

Update: 2018-07-15 23:18 GMT

பெங்களூரு,

ஒக்கலிகர் சங்கம் சார்பில் டாக்டர்கள் தின விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் கலந்து கொண்டு பேசியதாவது:–

கர்நாடகத்தில் 50 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த போலி டாக்டர்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக ஒரு சட்டத்தை இயற்ற அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்பது மாநில அரசின் கடமை ஆகும்.

கர்நாடகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென சோதனை நடத்தி போலி டாக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டு இருக்கிறது.

அரசின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து போலி டாக்டர்கள் செயல்பட்டால் அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்களின் பிரச்சினை, அவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு தயாராக உள்ளது. வாஜ்பாய் ஆரோக்கியஸ்ரீ, யசஸ்வினி உள்ளிட்ட பல்வேறு சுகாதார திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை மிக தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சிவானந்தபட்டீல் பேசினார்.

விழாவில் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேசுகையில், “நீட் தேர்வால் கர்நாடக மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன் மூலம் ‘நீட்‘ தேர்வில் தகுதி பெற்ற கர்நாடக மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 25 சதவீதம் பேருக்கும், மருத்துவ மேல் படிப்பில் 50 சதவீதம் பேருக்கும் இடம் கிடைக்கும். மருத்துவ கல்வித்துறையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு நான் தீர்வு காண்பேன்“ என்றார்.

மேலும் செய்திகள்