குழந்தைகள் விவரங்களை பதிவு செய்ய காப்பகங்களுக்கு அரசு உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் விவரங்களை பதிவு செய்ய காப்பகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-15 22:09 GMT
திருப்பூர், 


பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளை தடுத்து போதிய பாதுகாப்பு வழங்கும் பணியை சமூக நலத்துறை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதித்து விதிமுறைகளை நடைமுறைபடுத்தி வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர் காப்பகங்கள் கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள், காப்பகங்கள் அனைத்தும் இளைஞர் நீதி சட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன. காப்பகங்களில் உள்ள குழந்தைகள் விவரம், ஒவ்வொரு மாதமும், 15-ந்தேதிக்குள் தகவல் மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைப்பதுடன் பள்ளி மேலாண்மை குழுவில் இரு மாணவர் பிரதிநிதிகள், உறுப்பினராக சேர்க்க வேண்டும்.

மனித கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் மாதம் இருமுறை ஆய்வு நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்யும் போது மகளிர் போலீசாரும் உடன் செல்ல வேண்டும். சட்டத்திற்கு முரணான குழந்தைகளை கையாளும் முறை மற்றும் நடைமுறைகள் குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் பலகைகள் வைக்க வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்