தேங்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தா.புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. அதே போல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் நெல், காய்கறிகளுடன், தென்னை சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் தேங்காய்கள் ஒட்டன்சத்திரம் மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செயல்படும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் விளைச்சலான தேங்காய்க்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் வரை காங்கேயம் மார்க்கெட்டில் ஒரு டன் தேங்காய் ரூ.31 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது அவற்றின் விலை வீழ்ச்சியடைந்து ரூ.21 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து சத்திரப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏற்கனவே கிடைத்து வந்த விலையைவிட தற்போது பாதி விலைக்கே மார்க்கெட்டில் தேங்காய் விற்பனையாகிறது என்றனர்.