தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் சாவு

பழனி அருகே, தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்தன. தெருநாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2018-07-15 21:45 GMT
கீரனூர், 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மேல்கரைப்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரனின் தோட்டத்துக்குள் தெருநாய்கள் புகுந்து கொட்டகையில் இருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த 5 ஆடுகள் துடிதுடித்து இறந்தன.

நேற்று காலையில் வழக் கம்போல் தோட்டத்துக்கு சென்ற ராஜேந்திரனிடம் தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் இறந்து போனதை அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தோட்டத்துக்கு சென்று இறந்த ஆடுகளின் உடல்களை பார்த்தார். பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்த அவர், தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அதையடுத்து இறந்த ஆடுகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மேய்ச்சலுக்காக விடப்பட்ட கன்றுக்குட்டியை தெருநாய்கள் கடித்து கொன்றன. மேலும் ஆடு, கோழிகள் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் எங்கள் பகுதி மக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 

மேலும் செய்திகள்