சந்தன மரம் மீண்டும் வெட்டிக் கடத்தல்
கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து மீண்டும் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்றனர். இதன் காரணமாக கோவில் காவலாளி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கம்பம்,
தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் கம்பம் கம்பராயபெருமாள் கோவில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு சிவன், பெருமாள் சன்னதிகள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்த கோவிலை சுற்றி ஏராளமான கடைகளும், குடியிருப்புகளும் இருப்பதால் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும் கோவில் பாதுகாப்பு பணிக்காக அறநிலையத்துறை சார்பில் பாதுகாப்பு பணியாளர்களும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் வளாகத்தின் மேற்கு நுழைவு வாயில் தென்புறத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான சந்தனமரத்தின் ஒரு பகுதியை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்றனர். இதையடுத்து கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பிரத்தியேக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும் கோவில் வளாகத்திற்குள் சந்தேகப்படும்படி சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் காவலாளி ஆகியோருக்கு செயல்அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கோவில் வளாகத்தில் இருந்து ஏற்கனவே வெட்டப்பட்ட சந்தன மரத்தை முழுவதுமாக மீண்டும் வெட்டிக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் மேற்கு நுழைவு வாயில் வழியாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் சந்தன மரம் அடியோடு வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு செயல்அலுவலர் விரைந்து வந்து பார்வையிட்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திலும், கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். இதையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, வனச்சரகர் தினேஷ் ஆகியோர் கோவிலுக்கு சென்று மரம் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கவனக்குறைவாக பணி செய்ததாக கோவில் காவலாளி வடமலைராஜ் (வயது 57) என்பவரை பணி இடைநீக்கம் செய்து செயல் அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கடந்த வாரம் கோவிலுக்குள் இருந்த சந்தனமரம் வெட்டப்பட்டது தொடர்பாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்திடக்கோரி தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது, அவரும் இது தொடர்பாக விசாரணை செய்து உரிய மேல்நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்புமாறு போலீஸ் சூப்பிரண்டு, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தேனி மாவட்ட வனஅலுவலர், மதுரை வனப்பாதுகாவலர், உத்தமபாளையம் தாசில்தார் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த ஒரு வாரகாலத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குள்ளே கோவிலில் இருந்த சந்தன மரத்தை முழுமையாக வெட்டப்பட்டுள்ளது. இது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, என்றார்.