ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை இல்லை: சட்டசபைக்குள் தடையை மீறி செல்வோம்

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்காத நிலையில் இன்று சட்டசபைக்கு செல்வோம். தடை விதித்தால் அதை மீறுவோம் என சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2018-07-15 23:00 GMT

புதுச்சேரி,

புதுவையில் ஆளுங்கட்சியின் பரிந்துரையின் பேரில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிப்பது வழக்கம். தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமித்து மத்திய அரசு அறிவித்தது.

அப்போது முதல் இந்த விவகாரம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நியமனத்தை எதிர்த்து முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. மற்றும் தனலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசின் நியமனம் செல்லும் என்ற உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் பிறப்பிக்காமல் வருகிற 19–ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்காததால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். அவர்களை தடுப்பது கோர்ட்டு அவமதிப்பாகும் என்று சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி பதிவிட்டிருந்தார்.

இதையொட்டி நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்து, தங்களை சட்டமன்ற கூட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு முடியும்வரை நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற கூட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கடிதம் கொடுத்துள்ளார்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் சட்டசபைக்கு செல்வீர்களா? என சாமிநாதன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

நாங்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை. அந்த உத்தரவினை சட்டசபை செயலாளரிடம் கொடுத்துள்ளோம். இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ள செல்வோம். எங்களை தடுத்தால் அதையும் மீறி சட்டசபைக்குள் செல்வோம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சுப்ரீம் கோர்ட்டில் தொடருவோம்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்