ரூ.20 லட்சம் மோசடி; பஸ் கம்பெனி அதிபர் மீது வழக்கு

ரூ. 20 லட்சம் மோசடி செய்த பஸ் கம்பெனி அதிபர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-07-15 21:45 GMT

ராமநாதபுரம்,

திருவாடானை தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 43). இவரிடம் வடக்கு ரதவீதியை சேர்ந்த வெங்கட்டராமன் மகன் சீனிவாச அய்யங்கார் என்பவர் கடந்த 2014–ம் ஆண்டு தான் நடத்தும் பஸ் கம்பெனியில் பங்குதாரராக சேருமாறும், பஸ் வாங்குவதற்கு ரூ.20 லட்சம் தருமாறும் கேட்டுள்ளார். தொழில் தொடங்கும் நோக்கில் இருந்த செந்தில்குமார் அவர் கேட்டபடி ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாச அய்யங்கார் இதேபோல செந்தில்குமாரின் உறவினர் மோகன் என்பவரிடமும் பஸ் வாங்குவதாக பணம் வாங்கி கொண்டு பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட 2 பஸ்களை அவருடைய பெயரிலேயே வாங்கி வந்தாராம். இதுகுறித்து செந்தில்குமார் கேட்டபோது அலுவலக நடைமுறை காரணங்களுக்காக தனது பெயரில் பதிவு செய்ததாகவும், ஒருவாரத்தில் மாற்றிக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய செந்தில்குமார் தொடர்ந்து மாற்றி தராததால் திரும்பதிரும்ப கேட்டுள்ளார்.

காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு சீனிவாச அய்யங்கார் ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால் பஸ்சின் உரிமையை மாற்றித்தருவதாக கூறியுள்ளார். தனது பணத்தின் மூலம் பஸ் வாங்கி அதன் லாபத்தையும் அனுபவித்துக்கொண்டு மேலும், பணம் கேட்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்–2ல் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து சீனிவாச அய்யங்காரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்