பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக 38 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை, கலெக்டர் லதா தகவல்
மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக 38 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் லதா தெரிவித்தார்.
சிவகங்கை,
வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் லதா கூறியதாவது:–
மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவைகளில் இதுவரை மொத்தம் ஆயிரத்து 310 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி 1,200–ல் இருந்து 1,400 வாக்குகளுக்கு மேல் உள்ள இடங்களில் கூடுதலாக வாக்குபதிவு மையங்கள் அமைக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நகர் பகுதியில் புதிய 12 மையங்களும், ஊரக பகுதியில் 26 மையங்களும் என 38 வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட உரிய அனுமதி வேண்டி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1.9.2018 அன்று வெளிவர உள்ள வாக்காளர் பட்டியலின்போது வாக்குச்சாவடி மையங்களுக்கான புதிய அனுமதியும் கிடைத்துவிடும். மேலும் 46 இடங்களில் இருந்த மையங்கள், அதே இடத்தில் வேறு அறைகளில் அமைக்கப்பட உள்ளது. எனவே வாக்குச்சாவடிகள் தொடர்பான தகவல் தெரிவிக்க விரும்பினால் உடனே தெரிவித்தால் கள ஆய்வு மேற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், அ.தி.மு.க. சார்பில் நகர அவைத்தலைவர் பாண்டி, செயலாளர் ஆனந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபி, பா.ஜனதா மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுத்து, சேங்கைமாறன், வக்கீல் அழகர்சாமி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பெரோஸ்காந்தி, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், தே.மு.தி.க. சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர துணைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.