ஈரோட்டில் துணிகரம்: தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில், தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 16 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-07-14 22:15 GMT



ஈரோடு,

ஈரோடு திண்டல் திரிவேணிநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செல்வமேரி (35). இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். ராஜேஷ் வேலை காரணமாக கேரள மாநிலத்திற்கு சென்றிருந்தார். இதனால் செல்வமேரியும் திண்டலில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்தநிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் நகையும், ரூ.7 ஆயிரமும் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.


இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்து உள்ளது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று கதவு, சுவர், பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்