நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது - திட்ட இயக்குனர் விவேக் தத்தார்

நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது, அணுக்கழிவு இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படமாட்டாது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குனர் விவேக் தத்தார் தெரிவித்தார்.

Update: 2018-07-14 23:30 GMT
தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் இயக்குனர் விவேக் தத்தார் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைத்து, அதற்கு கீழ் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. இதனால் நில அதிர்வுகள் ஏற்படாது. சுரங்கம் அமைப்பதற்கு பாறையை தகர்க்க மொத்தம் 340 டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படும். இவை ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படமாட்டாது. கொஞ்சம், கொஞ்சமாக தான் பயன்படுத்தப்படும். இங்கு பாறைகளை தகர்த்து சுரங்கம் அமைக்கும் போது சுமார் 500 மீட்டர் தூரத்தில் கை தட்டுவது போன்ற சத்தம் தான் கேட்கும். குடியிருப்புகளுக்கு எந்த அதிர்வும் ஏற்படாது. இதனால், அணைகளுக்கு பாதிப்பு என்று சொல்வது எல்லாம் பொய் பிரசாரம்.

இந்த ஆய்வுக்கூடத்தில் மிகப்பெரிய உணர் கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த கருவி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இந்திய மாணவர்களை கொண்டும், இந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் இந்த உணர் கருவி தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான சிறு, சிறு பாகங்கள் தயாரிக்கும் பணி கோவை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நடந்து வருகிறது. குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக நியூட்ரினோ உணர் கருவியின் ஒரு பாகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அது மதுரையில் உள்ள மாதிரி ஆய்வகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதன் செயல்பாட்டை சோதித்து பார்த்ததில் இந்த திட்டத்தின் முதல் வெற்றியை பெற்றுள்ளோம்.

இந்த திட்டத்தில், விண்ணில் இருந்து வரக்கூடிய நியூட்ரினோக்களைதான் ஆய்வகத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடம் அமைப்பது எதற்காக என்றால், விண்ணில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களுடன் காஸ்மிக் கதிர்கள் கலந்து வரும். காஸ்மிக் கதிர்களை வடிகட்டி, நியூட்ரினோவை தனிமைப்படுத்தி உணர்கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இங்கு பொருத்தப்படும் தொலைநோக்கியானது எல்லா திசைகளில் இருந்தும் வரும் நியூட்ரினோ துகள்களை பார்வையிடும் வகையில் இருக்கும். இங்கு 50 ஆயிரம் டன் எடை கொண்ட மின்காந்தம் பொருத்தப்படும். இது உலகில் மிகப்பெரியது. அளவில் தான் இது மிகப்பெரியது. ஆற்றலில் பெரியது கிடையாது. இதில் 1 அடி தூரத்துக்கு மேல் கதிர்வீச்சு இருக்காது. ஒரு நாளைக்கு 3 நியூட்ரினோ துகள்கள் தான் இந்த உணர் கருவியில் விழும். அது கதிர்வீச்சு எதையும் வெளியிடாது.

இந்த திட்டத்துக்கு ரூ.1,583 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு நடக்கும் கட்டுமான பணிகளின் போது நாள் ஒன்றுக்கு சுமார் 5 கிலோ லிட்டர் (5 ஆயிரம் லிட்டர்) தண்ணீர் தேவைப்படும். அதன்பிறகு நாள் ஒன்றுக்கு 340 கிலோலிட்டர் (3 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர்) தண்ணீர் தேவைப்படும். இந்த தண்ணீர் என்பது, 300 குடும்பங்கள் பயன்படுத்தும் தண்ணீர் அளவே ஆகும். அதுவும், அங்கு தங்கும் விஞ்ஞானிகள் குளிக்க, குடிப்பதற்கு மற்றும் சுரங்கத்தில் ஏ.சி. அமைத்து பயன்படுத்துவதற்கு தேவைப்படும்.

நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் மக்களிடம் ஏற்பட்ட போலியான அச்சம் காரணமாக இந்த திட்ட பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தற்போது வனத்துறையின் அனுமதி மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைக்க வேண்டும். அது கிடைத்து விட்டால், மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி விரைவில் இந்த திட்ட பணிகள் தொடங்கப்படும். மனித வள மேம்பாட்டுக்கு இந்த திட்டம் மிகவும் அவசியம்.

அமெரிக்காவில் உள்ள பெர்மி ஆய்வகத்துக்கும், பொட்டிப்புரத்தில் அமைய உள்ள ஆய்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அங்கு இருந்து செயற்கை நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி ஆய்வு செய்வதாக சொல்வது பொய்யான வாதம். மேலும், இங்கு அணுக்கழிவுகள் எதுவும் கொண்டு வந்து ஆய்வு செய்யப்படமாட்டாது. காஸ்மிக் கதிர்களில் இருந்து தனிமைப்படுத்தி நியூட்ரினோ துகள் களை ஆய்வு செய்ய உள்ள நிலையில், அங்கு அணுக்கழிவுகளை வைத்தால் ஆய்வே செய்ய முடியாது.

பொட்டிப்புரத்தில் தேர்வு செய்துள்ள மலையானது கிரானைட் கற்கள் கொண்ட மலை. சுரங்கம் அமைக்கும்போது வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள் தமிழக அரசுக்கு சொந்தமானது. இங்கு 90 சதவீதம் கிரானைட் கற்களும், 10 சதவீதம் எம்.சாண்ட் என்னும் செயற்கை மணலும் கிடைக்கும். இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் கிரானைட் கிடைக்கும். அதாவது சுமார் 6 லட்சம் டன் கிரானைட் ஆகும். அதை தமிழக அரசு விற்பனை செய்து வருவாய் ஈட்டிக் கொள்ள முடியும். இந்த திட்டம் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. இது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம்.

இதற்காக மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் எதிரே நியூட்ரினோ திட்ட மாதிரி ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மாணவர்கள், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேரில் வந்து பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விஞ்ஞான பிரசார நிறுவனத்தின் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்