கிணத்துக்கடவு அருகே விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

கிணத்துக்கடவு அருகே விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-14 22:30 GMT

கிணத்துக்கடவு,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் அழுத்த மின்பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 320 கிலோ மெகாவாட் மின்சாரத்தை டவர் லைன் வழியாக தமிழகத்தில் புகலூர் வழியாக கேரள மாநிலம் திருச்சூருக்கு விவசாய நிலம் வழியாக கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல பவர்கிரிட் நிறுவனம் டவர் லைன் அமைக்கும் பணிக்கான ஆய்வை தொடங்கியது.

இந்த நிலையில் கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட கோடங்கிபாளையம் பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் செல்வராஜ் என்ற விவசாயியின் நிலத்தை அளவீடு செய்ய முயன்றபோது அந்த விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிலத்தை அளவீடு செய்தால் குடும்பத்துடன் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தாசில்தார் விமலா, துணை தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் மோகன்பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தங்கபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி செல்வராஜிடம் தற்போது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.

நிலம் அளவீடு செய்தால்தான் எந்த அளவில் இடம் உள்ளது. எங்கு டவர் அமைப்பது என்ற விவரம் தெரியவரும். ஆட்சேபனை இருந்தால் நீங்கள் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என கூறினர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கிணத்துக்கடவு தாசில்தார் விமலா கூறியதாவது:– சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரள மாநிலம் திருச்சூருக்கு 320 கிலோ மெகாவாட் மின்சாரத்தை டவர் லைன் வழியாக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் அழுத்த மின்பாதை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் காட்டம்பட்டி, பெரியகளந்தை, ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், குருநெல்லிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தாபுரம், சூலக்கல், சொக்கனூர் ஆகிய ஊர்களின் வழியாக கேரளாவுக்கு மின்சாரத்தை டவர் லைன் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டம் மூலம் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் வழியில் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக 74 டவர்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு அளவீடு செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்