குக்கிராமங்கள் தோறும் குறைதீர் முகாம் நடத்தப்படும், அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

குக்கிராமங்கள் தோறும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

Update: 2018-07-14 22:15 GMT

சிவகங்கை,

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் புலியடிதம்மம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம், கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வருவாய் அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தார். முகாமில் புலியடிதம்மம், பள்ளிதம்ம்ம், மராகாத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றி தர வேண்டியும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித்தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக 300 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் முகாமில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:– கிராம மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றி அதிகாரிகளை தேடி செல்வதால் ஏற்படும் கால தாமதம் மற்றும் பணவிரயத்தை இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படுகிறது. தற்போது இந்த குறைதீர் கூட்டம் கிராம அளவில் நடைபெறுகிறது. இதனையடுத்து குக்கிராமங்கள் தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தி, மக்களிடம் மனுக்கள் பெறப்பட உள்ளது என்றார்.

இந்த முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, தாயுமானவன், முத்துக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்