சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் யானை பூரண குணம் அடையும் என்று கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்தார்.

Update: 2018-07-14 22:45 GMT

ஒரத்தநாடு,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த ஜெயலலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு யானை குட்டி ஒன்றை வழங்கினார். இதற்கு மசினி என்று பெயரிடப்பட்டது. இந்த யானை, கோவிலில் நடைபெறும் பூஜை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் 9 வயதாகும் மசினி யானைக்கு கடந்த மே மாதம் திடீரென மதம் பிடித்தது. இதனை தொடர்ந்து அந்த யானை தன்னை பராமரித்து வந்த பாகன் கஜேந்திரனை கடந்த மே மாதம் 25–ந் தேதி காலால் மிதித்து கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருச்சியை சுற்றியுள்ள கோவில்களில் பணிபுரியும் யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டு மசினி யானை சாந்தப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை மசினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சோர்வடைந்த யானை உணவு உட்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் வழிகாட்டுதலின்படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் திருச்சிக்கு சென்று மசினிக்கு கடந்த 7 நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் யானையின் முன் கால் மற்றும் அடி வயிறு பகுதிகளில் ஏற்பட்ட வீக்கம் குறையவில்லை. இதனால் இந்த யானையை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மசினி அங்கிருந்து லாரி மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரத்தநாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து மசினிக்கு கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) மோகன் தலைமையில் மருத்துவர்கள் பழனிச்சாமி, செல்வராஜ், வீரச்செல்வம், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணியளவில் மசினி நின்று கொண்டு உணவை தானாகவே எடுத்து உட்கொண்டது.

இதுகுறித்து யானைக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்(பொறுப்பு) மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தற்போது யானையின் கால் பகுதி வீக்கம் குறைய தொடங்கி உள்ளது. மேலும் யானை புல், தண்ணீர் உள்ளிட்ட உணவுகளை நன்கு உட்கொள்கிறது. சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவக் குழுவினர் நாளை(திங்கட்கிழமை) இங்கு வருகை தந்து மசினிக்கு சிகிக்சையும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர். இதனால் மசினி இன்னும் சில தினங்களில் பூரண குணம் அடைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்