மானாமதுரை பகுதியில் ஆற்றை தொடர்ந்து கண்மாய்களிலும் மணல் திருட்டு

மானாமதுரை பகுதியில் ஆற்றில் மணல் கொள்ளை நடந்துவரும் நிலையில், தற்போது கண்மாய்களிலும் இரவு நேரங்களில் மணல் திருட்டு படுஜோராக நடைபெற்று வருகிறது.

Update: 2018-07-14 21:45 GMT

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் கீழமேல்குடி, கரிசல்குளம், வன்னிக்குடி, தெ.புதுக்கோட்டை, மேலநெட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்மாய்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக வைகை ஆற்றில் போதிய நீர் வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் கண்மாய்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு பலரும் இரவு நேரங்களில் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கண்மாய்களில் மணலை திருடி விற்பனை செய்து வருகின்றனர். ஒரு லோடு சவடு மண் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மானாமதுரையை சுற்றிலும் சவடு மணல் அள்ள குவாரிகள் இல்லலததால் திருட்டுத்தனமாக கண்மாய்களில் அள்ளி விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் விவசாய பணிகளுக்காக வாங்கப்பட்ட டிராக்டர்களில் இரவு முழுவதும் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர், மர்ம கும்பல்கள். மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால் கிராமப்புற கண்மாய்கள் காணாமல் போய் வருகின்றன. பல கண்மாய்களில் கரைகளை உடைத்தும், தடுப்புச்சுவர்களை சேதப்படுத்தியும் மணல் அள்ளப்பட்டு வருகின்றன. மணல் திருடர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாயும் என தமிழக அரசு அறிவித்து இருந்தாலும், சிவகங்கை மாவட்டத்திலேயே அதிக அளவு மணல் திருட்டு நடைபெறும் பகுதியாக மானாமதுரை உள்ளது. ஆனால் இங்கு இதுவரை மணல் திருடர்கள் யார் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மானாமதுரை கண்மாயில் சிலர் டிராக்டர்களில் திருட்டுத்தனமாக சவடு மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து, மானாமதுரை கிராம நிர்வாக காளிமுத்து சோதனைக்கு சென்றார். அவரை பார்த்தவுடன் மணல் திருடர்கள் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து அங்கு நின்றிருந்த டிராக்டரை மானாமதுரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்