விருதுநகர் அருகே ஒருதலைக்காதலால் விபரீதம்: மாணவியை கொன்று சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை

விருதுநகர் அருகே ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-07-14 23:15 GMT

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ளது, ரெட்டியபட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் பொன் மகாலட்சுமி(வயது 19). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த மதுரை சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்த முத்துபாண்டி மகன் மதன்குமார்(20) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மதன்குமார் தனது காதலை அந்த மாணவியிடம் தெரிவித்தபோது, அவர் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் அவர் மீது மதன்குமார் வெறுப்படைந்த நிலையில் இருந்துவந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மதியம் பொன் மகாலட்சுமி தனது வீட்டின் அருகில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மதன்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன் மகாலட்சுமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த மகாலட்சுமி உயிருக்காக போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பொன் மகாலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.

இதற்கிடையில் தப்பியோடிய மதன்குமார், தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை போலீசார், மதன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்