ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த 3 ஆயிரம் பேருக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வேலை இழந்த 3 ஆயிரம் பேருக்கு மாற்று வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-07-14 09:19 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வேலை இழந்த 3 ஆயிரம் பேருக்கு மாற்று வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வேலைவாய்ப்பை இழந்த பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து தனியார் நிறுவனத்தினருடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த சுமார் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் www.tho-ot-hu-ku-di.on-l-i-ne என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள் தங்கள் சுயவிவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த இணைதளத்தில் பல்வேறு தனியார் நிறுவனமும் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பதிவேற்றம் செய்தவர்களின் சுய விவரங்களை பார்த்து தகுதி மற்றும் காலிப்பணியிடத்துக்கு ஏற்ப தேவைப்படும் நபர்களை, நிறுவனங்களே தேர்வு செய்யலாம். மேலும் தனியார் நிறுவனத்தின் ஆட்கள் தேவைக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட உள்ளது.

ஒத்துழைப்பு

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) முத்துமாதவன் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்