நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட புதிய பஸ் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட புதிய பஸ்சை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-14 08:00 GMT
நெல்லை, 

நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட புதிய பஸ்சை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

குளிரூட்டப்பட்ட புதிய பஸ்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் நலன் கருதி சிரமம் இல்லாமல் பஸ்களில் பயணம் செய்யும் வகையில் படுக்கை வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பஸ்சை சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்துக்கு ஒரு பஸ் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த பஸ் தொடக்க விழா நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் தினமும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் அங்கு இருந்து ஒரு பஸ் புறப்பட்டு நெல்லைக்கு வரும்.

30 படுக்கை வசதி

பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா ஒரு போர்வை மற்றும் கம்பளி வழங்கப்படும். இந்த பஸ்சில் 30 படுக்கைகள் உள்ளன. அனைத்து ஜன்னல் கண்ணாடிகளும் அவசர காலத்தில் உடைப்பதற்கு தகுந்தால் போல் கருவி பொருத்தப்பட்டுள்ளது. முதியோர்கள் பஸ்சில் ஏறுவதற்கு வசதியாக சாய்தள வசதி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர்களை அவசர காலத்தில் அழைப்பதற்கு தகுந்தாற்போல் அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது.

விழாவில் எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்தி முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் மோனி, கோட்ட மேலாளர் சிவகுமார், கிளை மேலாளர் ராஜராஜன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கணேசராஜா, நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், இளைஞர் பாசறை முன்னாள் செயலாளர் அரிகர சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்