கிணற்றுக்குள் தவித்த அண்ணன்-தங்கை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
பெருந்துறை அருகே 8 மணி நேரம் கிணற்றில் தவித்த அண்ணன்-தங்கையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள்.
பெருந்துறை,
ஒடிசா மாநிலம், போர்ஜெர்ஸ் மாவட்டம், குனேணர் பகுதியைச் சேர்ந்தவர் நரேன்புட்டேல். இவர்களுடைய மகன் பரத் புட்டேல் (வயது 21), மகள் மீனாபுட்டேல் (18). இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெரியவேட்டுவபாளையம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று காலை 10 மணி அளவில் மீனாபுட்டேல் வீட்டு குப்பைகளை கொட்டுவதற்காக அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார். 150 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் கிடையாது. அந்த கிணற்றின் கைப்பிடி சுவரைப் பிடித்தபடி மீனாபுட்டேல் குனிந்து குப்பையைக் கொட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தலைகுப்புற கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதைப்பார்த்து கொண்டிருந்த அவரது அண்ணன் பரத் புட்டேல், தனது தங்கையை காப்பாற்ற வீட்டில் இருந்த நீளமான சேலைகளை கிணறு அருகே உள்ள தூணில் கயிறு போல இணைத்து கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால் சேலை பாதியிலேயே அறுந்து அவரும் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
இதனால் 2 பேரும் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங் கள்” என கூக்குரலிட்டார்கள். ஆனால் வெளியில் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை. அந்த வழியாக யாரும் செல்லவும் இல்லை. இதனால் 2 பேரும் கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்கள். கிணற்றுக்குள்ளேயை இருந்தனர். சுமார் 8 மணி நேரம் கழித்து மாலை 6 மணி அளவில் அங்குள்ள ஒரு பெண் தனது வீட்டு குப்பையை கொட்டுவதற்காக கிணறு அருகே சென்றார். அப்போது அண்ணன்-தங்கை இருவரும் கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை பார்த்தார்.
உடனே இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து கயிறுகள் கட்டி, அதன் வழியாக கிணற்றுக்குள் இறங்கினார்கள். பரத் புட்டேல், மீனாபுட்டேல் 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். அண்ணன்-தங்கை 2 பேரும் கிணற்றில் கிடந்த குப்பை மேட்டின் மீது விழுந்ததால் அவர்களது உடலில் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.