பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கற்றல், கற்பித்தல் பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கல்வித்தரம் மேம்பட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கப்பியாம்புலியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு தவறாமல் வருகை புரிவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் செயலை திறம்பட மேற்கொள்ள வேண்டும். விரைவாக கற்போர், மெல்ல கற்போர் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்தாற்போல் பாடம் கற்பிக்க வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும். உடற்கல்வி, யோகா போன்ற உடல்நல கல்வியில் ஈடுபடவும் அறிவுறுத்த வேண்டும்.மேலும் சாதி, சமய வேறுபாடின்றி மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். குடும்ப சூழ்நிலை காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களை நெறிப்படுத்தி கற்றலின் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து, மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளில் 2017-18-ம் ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த 600 ஆசிரியர்களை பாராட்டி அதற்கான சான்றிதழை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் முருகவேல், ரத்தினசெல்வி, கிருஷ்ணப்பிரியா, சசி, ஆனந்தன், கிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேவியர் சந்திரகுமார், காளிதாஸ், கப்பியாம்புலியூர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் மகாதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.