பெருந்துறை அருகே பனியன் கம்பெனி அதிபர் தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு

பெருந்துறை அருகே கடன் தொல்லையால் பனியன் கம்பெனி அதிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2018-07-07 23:38 GMT

பெருந்துறை,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாமக்கல் மாவட்டம், கிழக்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் சாமுவேல். அவருடைய மகன் தீபன் (30). இவருடைய மனைவி அனிதா(30). இவர்களுக்கு பிரக்சித் (3) என்ற மகன் உள்ளான். தீபன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வந்தார்.

அதனால் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கிழக்கு பாலப்பட்டிக்கு மனைவி, மகனுடன் சென்றார். அங்குள்ள தனது வீட்டில் குடும்பத்தினரை விட்டு விட்டு நேற்று முன்தினம் மாலை அவர் காரில் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக காரிலேயே விஷம் குடித்துள்ளார்.

அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் கள்ளியம்புதூர் பிரிவு அருகே வந்தபோது தீபன் காரை நிறுத்தினார். பின்னர் அவர் தனது மனைவி அனிதாவிடம் செல்போனில், ‘எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதில் இருந்து எப்படி மீண்டு வருவது? என்பது தெரியவில்லை. எனவே இந்த துன்பத்தில் இருந்து விடுபட எனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, நான் விஷத்தை குடித்து விட்டேன்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

பின்னர் காரில் இருந்து இறங்கிய அவர் மயங்கி ரோட்டில் விழுந்தார். இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் தீபனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக, ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி தீபன் இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று தீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்