கைலாய புனித யாத்திரைக்கு சென்றபோது இறந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் உடல் சொந்த ஊரில் தகனம்: பொதுமக்கள் அஞ்சலி
ஆண்டிப்பட்டியில் இருந்து கைலாய மானசரோவருக்கு புனிதயாத்திரை சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் உடல் சொந்த ஊரில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் (வயது 69), இவர் தனது மனைவி நாகரத்தினம் (67) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 6 பேருடன் இமயமலையில் அமைந்துள்ள கைலாய மானசரோவர் கோவிலுக்கு புனித யாத்திரையாக சென்றார்.
நேபாளம் வழியாக கைலாய மலையை அடைந்தபோது, மோசமான வானிலை காரணமாக ராமச்சந்திரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்த தகவல் குறித்து அவருடைய மனைவி நாகரத்தினம், தனது மகன் வெங்கடேச நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து 2 பேரும் தந்தையின் உடலை பெறுவதற்காக நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுக்கு விரைந்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு ராமச்சந்திரனின் உடல் மகன் வெங்கடேச நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் காட்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை உடல் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து நேற்று காலை ஆம்புலன்ஸ் மூலம் ராமச்சந்திரனின் உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது வீட்டு முன்பு ராமச்சந்திரனின் உடல் கிராம மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் உள்பட ஆசிரியரின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆண்டிப்பட்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ராமச்சந்திரனின் மகன் வெங்கடேச நரசிம்மன் கூறும்போது, ‘எனது தந்தை இறந்த தகவல் கிடைத்ததும், நானும் எனது தங்கையும் கைலாய மானசரோவர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுவிட்டோம். இதற்கிடையே எனது மனைவி மற்றும் உறவினர்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம், எனது தந்தையின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுக்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பரிந்துரை செய்தார். மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்படி இந்திய தூதரக அதிகாரிகளான பிரணவ் கணேவ், தருண்ரகேசா மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் விரைந்து வந்து அப்பாவின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் முயற்சியால் நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டு மருத்துவமனையில் தந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்பாவின் உடலை மீட்டு கொண்டு வர பெரும் உதவி செய்த மத்திய-மாநில அரசுகள், தூதரக அதிகாரிகள், தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.