உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னணி அணிகள் வெளியேறியதால் டி-சர்ட்டுகள் விற்பனை மந்தம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னணி அணிகள் வெளியேறியதால் திருப்பூரில் டி-சர்ட்டுகள் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் தற்போது பிரேசில் அணியின் வெற்றியை கேரள வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் பண்டிகை மற்றும் சீசன் கால அடிப்படையில் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இதற்கேற்றபடி வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் கொடுக்கும் ஆர்டர்களின் பேரில் ஆடைகளை தயாரித்து அனுப்பி வருகிறார்கள். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் குளிர், கோடை கால ஆடைகள் எனவும் தொழில்துறையினர் ஆடை தயாரிப்பது வழக்கம். இது தவிர ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, அதற்கான ஆடை தயாரிப்பும், விற்பனையும் திருப்பூரில் பரபரப்பாக இருந்து வந்தது.
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணி வீரர்கள் அணியும் ஆடைகளை போல் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு அந்தந்த தலைநகர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வர்த்தகம் நடந்தது. இந்நிலையில் தற்போது ரஷியாவில் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.
கால்பந்து ரசிகர்கள் கேரளாவில் அதிகளவில் இருந்து வருகிறார்கள். இதனால் திருப்பூரில் உள்ள உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்களுக்கு, கேரளாவில் இருக்கும் வர்த்தகர்கள் கொடுக்கும் ஆர்டர்களின் பேரில் டி-சர்ட்டுகள் தயாரித்து அனுப்பிவைக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆடை தயாரிப்பாளர்களும் உற்சாகமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது முன்னணி அணிகள் பல தோல்வியடைந்து வெளியேறியதால் டி-சர்ட்டுகள் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் பிரேசில் அணியின் வெற்றியை எதிர்பார்த்து கேரள வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர் பிரபு கூறியதாவது:-
ரஷியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் உருகுவே, பிரான்ஸ், அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்வீடன் உள்பட பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள பகுதி கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகும்.
கேரள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணி வீரர்கள் அணிந்து விளையாடும் டி-சர்ட்டுகளை வாங்கி அணிவார்கள். இதில் பெரும்பாலான கேரள வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுப்பது அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், பிரேசில் அணி வீரர்கள் அணியும் ஆடைகளை தான் ஆர்டர்கள் கொடுப்பார்கள். கேரள மாநிலத்தில் மலப்புரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தது.
அதற்கேற்றபடி டி-சர்ட்டுகளை தயாரித்து அனுப்பி வந்தோம். விற்பனையும் நன்றாக சென்று கொண்டிருந்தது. மேலும், அதிகமாகவும் டி-சர்ட்டுகளை தயாரித்து வைத்திருந்தோம். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக முன்னணி அணிகளான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக கேரளாவிற்கு நன்றாக சென்று கொண்டிருந்த அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணியின் டி-சர்ட்டுகள் விற்பனை தற்போது மந்தமடைந்துள்ளது. டி-சர்ட்டுகள் விற்பனையின்றி கடைகளில் தேக்கமடைந்தபடி இருக்கின்றன. இந்நிலையில் பிரேசில் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் பிரேசில் அணியின் வெற்றியை எதிர்பார்த்து கேரள வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.
பிரேசில் அணி இன்று (வெள்ளிக்கிழமை) பெல்ஜியத்துடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் கேரள வியாபாரிகள் மேலும் ஆர்டர்கள் கொடுப்பார்கள். இதனால் பிரேசில் அணியின் வெற்றியை நாங்களும் எதிர்பார்த்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.