பாலாறு படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பாலாறு படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
அணைக்கட்டு,
மோர்தானா அணையின் வலதுபுற கால்வாயின் வழியே செல்லும் தண்ணீர் செதுவாலை, விரிஞ்சிபுரம், இறைவன்காடு மற்றும் சதுப்பேரி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது. இந்த ஏரிகளின் வரத்து கால்வாய்களில் அடைப்புகள் இருப்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் அருகில் செல்லும் மோர்தானா, அகரம் ஆற்றின் இணைப்பு வலதுபுற கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள மண் அடைப்புகள், செடி, கொடி, புதர் அடைப்புகளை உடனடியாக அகற்றவும், பாலாற்று ஓரம் செல்லும் மோர்தானா வலதுபுற கால்வாயில் சுமார் 30 மீட்டர் அளவிற்கு ஏற்பட்டுள்ள உடைப்பை போர்க்கால அடிப்படையில் சீர் செய்திடவும், வெட்டுவாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பாலாற்று படுகையில் அதிகளவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சின்னச்சேரி அகரம் ஆற்றின் தடுப்பணையின் நீளம் குறைவாக இருப்பதால் வெள்ளப்பெருக்கின் போது அதிகப்படியான நீர் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இத்தடுப்பணையை பார்வையிட்ட கலெக்டர் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையை உடனடியாக பழுதுபார்க்கவும், இதன் நீளத்தை அதிகப்படுத்த தேவையான திட்ட அறிக்கை தயாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் உடனடி நடவடிக்கையாக மண் கரையை ஏற்படுத்தி வெள்ளநீர் நிலங்களில் உட்புகாமல் இருக்க பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அகரம்சேரி ஏரியில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதி விவசாயிகள் பாசன சங்கங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
ஏரியில் உள்ள முட்புதர்கள், கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர் செய்யவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்) விஸ்வநாதன், உதவி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.