2018–19–ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் தாக்கல் ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி

2018–19–ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்தார். ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2018-07-05 23:00 GMT

பெங்களூரு,

2018–19–ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்தார். ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. சித்தராமையா 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது.

குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவர் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக அறிவித்தார். அதற்கு முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து பட்ஜட் தாக்கல் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலை குமாரசாமி பெற்றார்.

கூட்டணிக்கு சிக்கலை உண்டாக்கியது

தர்மஸ்தலாவில் உள்ள உஜிரி ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் 12 நாட்கள் தங்கி சித்தராமையா சிகிச்சை பெற்றார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுகையில், குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் கூறினார். இது தொடர்பான உரையாடல் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது கூட்டணி ஆட்சிக்கும் சிக்கலை உண்டாக்கியது. குமாரசாமி திட்டமிட்டப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது. அதைத்தொடர்ந்து சித்தராமையா தலைமையிலான கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது. அதில் பட்ஜெட் தாக்கல் செய்ய குமாரசாமிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விவசாய கடன் தள்ளுபடி

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2–ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. 5–ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4–வது நாள் கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்–மந்திரி குமாரசாமி, 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட் அதாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமாக ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு கடன் தள்ளுபடி உச்சவரம்பு ரூ.2 லட்சம் ஆகும். பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரிகள் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. பெங்களூருவில் உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

தென்னை விவசாயிகளின் நலனை...

* முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதே போல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* கோலார், சித்ரதுர்கா, கொப்பல், கதக் ஆகிய மாவட்டங்களில் 5 எக்டேர் பரப்பளவு தரிசு நிலத்தில் இஸ்ரேல் மாதிரியில் உழவு பணிகள் மேற்கொள்ள ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* துமகூரு, கார்வார், யாதகிரி, ஹாவேரி ஆகிய மாவட்டங்களில் இஸ்ரேல் மாதிரியில் தோட்டக்கலை பயிர்களை பயிரிட ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* தென்னை விவசாயிகளின் நலனை காக்க ரூ.190 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* கலபுரகி, மைசூரு, தார்வார் ஆகிய இடங்களில் பாதுகாக்கப்பட்ட கால்நடை விந்து விநியோக மையங்கள் ரூ.2½ கோடி செலவில் அமைக்கப்படும்.

* ரூ.3 கோடி செலவில் பசுமை தீவன மையம் அமைக்கப்படும்.

* 20 ஆயிரம் எக்டேர் நீர்ப்பரப்பில் எக்டேருக்கு 2 ஆயிரம் மீன் முட்டைகள் வீதம் வளர்க்கப்படும்.

ஆங்கில வழி வகுப்பு

* மகளிர் சுயஉதவி குழுக்களில் திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் தகுதியை உயர்த்தவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் ‘காயக‘ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை பூஜ்ஜிய வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.

* 3 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

* தெருவோர மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உதவும் நோக்கத்தில் 5 நகரங்களில் நுண்ணிய நிதி வசதியை ஏற்படுத்தி கொடுக்க ‘படவர பந்து‘(ஏழைகளின் தோழன்) நடமாடும் சேவை மையம் அமைக்கப்படும்.

* அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

* 48 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் வருகைப்பதிவுக்கு ‘பயோமெட்ரிக்‘ திட்டம் அமல்படுத்தப்படும்.

* அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

ராமநகரில் மருத்துவ கல்லூரி

* அங்கன்வாடி மையங்கள் 4,100 அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்படும்.

* 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

* ராமநகர் மாவட்டம் கனகபுராவில் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.

* மண்டியா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனை 800 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* ராமநகரில் ரூ.40 கோடி செலவில் 300 படுக்கைகள் கொண்ட உயர்பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

* கடந்த 2017–ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

3 நட்சத்திர ஓட்டல்கள்

* கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

* கலபுரகி, பெலகாவி, மைசூரு ஆகிய நகரங்களில் புதிய உயர்பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

* சுற்றுலா தலங்களில் 500 அறைகளுடன் 3 நட்சத்திர ஓட்டல்கள் கட்டினால் ரூ.3 கோடி மூலதனம் வழங்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் ஓய்வு எடுக்க தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

* சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பரசுக்கி மற்றும் மண்டியா மாவட்டத்தில் உள்ள ககனசுக்கி நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.5 கோடி செலவில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

* அன்னதானம், கல்வி, சமூக சேவைகளை ஆற்றி வரும் மடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி மானியம் வழங்கப்படும்.

* அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளுக்கு தலா 5 கிலோ அரிசி, மானிய விலையில் அரை கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில், 1 கிலோ அயோடின் உப்பு, வழங்கப்படும்(7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோ அரிசி குறைக்கப்படுகிறது).

மின்சார கம்பிகள் பூமிக்கடியில்...

* முதல்–மந்திரியின் மாத்ருஸ்ரீ திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 3 மாதங்கள், பிரசவத்திற்கு பின்பு 3 மாதங்கள் என 6 மாதத்திற்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

* மனநிலை பாதிப்பட்டவர்களின் கடனை தள்ளுபடி செய்ய ரூ.4 கோடி மானியம் வழங்கப்படும்.

* சித்ரதுர்கா எல்.இ.டி. பல்பு தயாரிக்கும் மையமாக மாற்றப்படும்.

* பெங்களூருவில் மின்சார கம்பிகள் பூமிக்கடியில் அமைக்கப்படும்.

* பெங்களூருவில் முதல்–மந்திரியின் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

* பெங்களூருவில் ஏழை மக்களுக்கு ஒதுக்க அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்படும்.

* ரூ.53 ஆயிரம் கோடியில் மாநில மக்களுக்கு அணைகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

மேகதாதுவில் புதிய அணை

* சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிருஷ்ணராஜசாகர் அணை பூங்காவை அமெரிக்காவில் உள்ள டிஸ்டினிலேண்ட் பூங்காவுக்கு நிகராக தரம் உயர்த்த அரசு–தனியார் பங்களிப்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* சந்தியா சுரக்ஷா திட்டத்தின் கீழ் 32.92 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.

* பெங்களூரு நகர போக்குவரத்து கழகத்திற்கு(பி.எம்.டி.சி.) ரூ.100 கோடி மானியம் வழங்கப்படும். புதிதாக 4,236 பஸ்கள் வாங்கப்படும்.

* தனியாருடன் சேர்ந்து ரூ.30 கோடி செலவில் ராமநகரில் திரைப்பட பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ராமநகரில் அமைக்கப்படும் திரைப்பட நகரில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.40 கோடி மூலதனம் வழங்கப்படும்.

* பெங்களூருவில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பெங்களூரு 3–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

விற்பனை வரி உயர்வு

* மண்டியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

* மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

* தனியார் சேவை வழங்கும் வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி 50 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

* மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்