26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2018-07-05 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். பொறியாளர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்குமார் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்