கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி
கோவை சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டதால் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பீங்கான் துண்டை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.
கோவை,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை போயர் வீதியை சேர்ந்தவர் சரவணன் என்ற ஏ.டி.எம். சரவணன் (வயது 28). இவர் ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி கோவை மத்திய சிறையில் 6-வது பிளாக்கில் அடைக்கப்பட்டார்.
சரவணன் சிறையில் பலரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை சிறை வார்டன்கள் கண்டித்தனர். அப்படியிருந்தும் சரவணன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சரவணன் 9-வது பிளாக்கிற்கு சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அது தனி அறை ஆகும்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சரவணன் சிறை அறையில் சாப்பிட பயன்படுத்திய பீங்கான் தட்டை உடைத்து அதன் ஒரு துண்டை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் சிறைக்காவலர்களிடம் கூறினார்.
உடனே சிறைக்காவலர்கள் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சரவணனுக்கு இனிமா கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் சரவணன் மீது தற்கொலைக்கு முயன்றதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கூறியதாவது:-
சரவணன் சிறையில் தகராறு செய்ததால் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு முன்பு அவர் 6-வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு கைதிகள் மற்ற கைதிகளோடு பேசிக் கொள்ளலாம். சிறையில் தகராறு, வம்பு செய்யும் கைதிகள் 9-வது பிளாக்கில் உள்ள தனி அறையில் அடைக்கப்படுவார்கள். அதன்படி சரவணனும் 9-வது பிளாக்கில் அடைக்கப்பட்டார். அங்கு கைதிகள் மற்ற கைதிகளோடு பேசிக் கொள்ள முடியாது. இதனால் மனம் வருத்தப்பட்ட அவர் பீங்கான் துண்டை விழுங்கி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீங்கான் துண்டை விழுங்கியதாக சரவணன் தான் கூறியுள்ளார். அதை சிறை காவலர்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. எனவே சரவணனுக்கு இனிமா கொடுத்து பரிசோதித்த பின்னர் தான் அவர் பீங்கான் துண்டை விழுங்கினாரா? என்பது உறுதி செய்யப்படும். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சரவணன் தற்போது நன்றாக உள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.