வடபழனியில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்தவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
வடபழனியில் செல்போனை பறித்து சென்றவரை மடக்கி பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பூந்தமல்லி,
சென்னை வடபழனியை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 21). இவர், மாங்காடு அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். தனலட்சுமி காலனி அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த மர்மநபர் திடீரென சிவகுமாரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார், திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள், செல்போனை பறித்து சென்றவரை மடக்கி பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், விருகம் பாக்கத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். இதுபோல் அவர் வேறு எங்காவது செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.