தனிக்கணக்கு தொடங்கியதை தடுக்காதது ஏன்? காங்., என்.ஆர். காங். எம்.எல்.ஏ.க்கள் மோதல் அவையில் கூச்சல்- குழப்பம்

புதுவை மாநிலத்துக்கு தனிக்கணக்கு தொடங்கியதை தடுக்காதது ஏன்? என்பது குறித்து சட்டசபையில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

Update: 2018-07-05 22:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து பேசியதாவது:-

ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது புதுவை மாநிலத்தில் தனி பொது கணக்கு தொடங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது முற்றிலும் தவறானது. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதுதான் இது. அதாவது, தனிப்பொதுக்கணக்கு தொடங்கவில்லை என்றால் புதுவைக்கு கொடுத்து வரும் கடனை முற்றிலுமாக நிறுத்தி விடுவோம் என்ற ஒரு மிகப்பெரிய நிர்பந்தத்தை உருவாக்கி தனி கணக்கை தொடங்கச் செய்தது.

நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க கடன் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகும். பட்ஜெட்டில் ஏற்படும் இடைவெளி தொகையை மத்திய அரசு தொடர்ந்து அளித்து இருந்தால் புதுவை அரசுக்கு இவ்வளவு பெரிய கடன் சுமை ஏற்பட்டு இருக்காது.


புதுச்சேரி ஒரு சிறிய நிலப்பரப்பை கொண்ட பகுதியாகும். வருவாயை மிகப்பெரிய அளவில் உயர்த்துவதற்கு இங்கு கனிம வளங்களோ இயற்கை வளங்களோ கிடையாது. வரியை உயர்த்தினால் அண்டை மாநிலத்தில் இருந்து வரும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைத்து விடுகிறது. புதுவை மாநிலத்திற்கு தனி பொதுக்கணக்கை தொடங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு ரூ.2,177 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

அப்போது மத்திய அரசில் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருந்த தற்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு புதுவை மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட்டு இருந்தால் ரூ.2,177 கோடி கடன் பாக்கியை சர்வ சாதாரணமாக தள்ளுபடி செய்திருக்கலாம் அல்லது தனி பொதுகணக்கினை புதுவை அரசு மேல் திணிக்காமல் தடுத்து இருக்கலாம். தற்போதைய முதல்-அமைச்சர் மத்திய மந்திரியாக இருந்த போது அந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்யாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டார்.


டெல்லியில் இருப்பது போல் புதுவை மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதிய செலவையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை மத்திய மந்திரியாக இருந்தபோது ஏன் பெற்றுத் தரவில்லை. நமது முதல்-அமைச்சர், மத்திய மந்திரியாக இருந்தபோது மத்திய அரசின் கொடையை உயர்த்தி இருந்தால் புதுச்சேரி அரசு இப்படிப்பட்ட ஒரு மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து இருக்காது.

மின்சாரம், சொத்து, தண்ணீர், குப்பைக்கும் வரி என பல வகையான வரிகளை மக்கள் மீது இந்த அரசு சுமத்தி வருகிறது. முதல்-அமைச்சர், மத்திய அரசிடம் சுமுகமான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ளாததால் மத்திய அரசிடம் இருந்து அவரால் புதுவைக்கு நிதியை பெற்றுத்தர முடியவில்லை.

மத்திய மந்திரியாக இருந்த போதும் மத்திய அரசின் கொடையை புதுவைக்கு உயர்த்தி கொடுக்கவில்லை. முதல்-அமைச்சராக இருந்த போதும் புதுவை மக்களுக்கு எந்த பலனும் இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் காகித பூ பட்ஜெட்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன் ஆகியோர் ஒன்றாக எழுந்து பட்ஜெட் உரையின் மீது மட்டுமே பேச வேண்டும். முதல்-அமைச்சரை பற்றி இழிவாக பேசக் கூடாது. எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்.எஸ்.ஜே.ஜெயபால் (என்.ஆர்.காங்): லட்சுமிநாராயணன் 45 நிமிடம் பேசினார். அப்போது நாங்கள் ஏதாவது குறுக்கிட்டோமா?

(இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது)

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி எழுந்து, நான் மத்திய மந்திரியாக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும், நான் என்னென்ன செய்தேன் என்றும் நேற்று டி.பி.ஆர். செல்வம் பேசிய போது பதில் அளித்து விட்டேன். தற்போது அதை மீண்டும் கூற விரும்பவில்லை. நீங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளர்கள். 3 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது கடனை தள்ளுபடி செய்திருக்கலாமே. இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? என்றார். அதன்பின் கூச்சல், குழப்பம் முடிவுக்கு வந்தது.


மேலும் செய்திகள்