புதுவண்ணாரப்பேட்டையில் பரிதாபம்: பிஸ்கெட் ஊட்டும்போது மூச்சுத்திணறி குழந்தை சாவு

புதுவண்ணாரப்பேட்டையில் பிஸ்கெட் ஊட்டும்போது மூச்சுத்திணறி 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2018-07-05 22:45 GMT
பெரம்பூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன்நகரை சேர்ந்தவர் முரளி (வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (27). இவர்களுக்கு பிரத்தீபா என்ற 11 மாத பெண் குழந்தை இருந்தது.

நேற்று இரவு 8.30 மணி அளவில் குழந்தைக்கு, ஆர்த்தி பிஸ்கெட் ஊட்டிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.

சாவு

இதனால் பதற்றம் அடைந்த ஆர்த்தி, குழந்தையை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். தகவல் அறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பிஸ்கெட் ஊட்டும்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்