தமிழக மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன

தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள கூடிய வகையில் புதிய பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா கூறினார்.

Update: 2018-07-05 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ளவும், புதிய பாடநூல்கள் குறித்தும் ஆசிரிய கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான 6-ம் வகுப்பு ஆசிரிய கருத்தாளர்களுக்கு பாட வாரியாக புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மாவட்ட அளவிலான 9-ம் வகுப்பு தமிழ் பாட ஆசிரிய கருத்தாளர்களுக்கு புதுக்கோட்டை வட்டார வள மையத்திலும் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது, ‘புதிய பாடநூல்கள் சிறந்த வல்லுனர் குழுக்களை கொண்டு நவீன உத்திகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளன. இத்தகைய பாடநூல்கள் மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக மாணவர்களின் தனித்திறனை சோதிக்கும் வகையில் பல்வேறு போட்டி தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள் ளன. இந்த பயிற்சியை சிறப்பான முறையில் பெற்று மாணவர்களுக்கு சிறந்த முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்றார்.

இதேபோல் மாவட்ட அளவிலான 9-ம் வகுப்பு கணித பாட ஆசிரிய கருத்தாளர்களுக்கு அன்னவாசல் வட்டார வளமையத்திலும், 9-ம் வகுப்பு ஆங்கில பாட ஆசிரிய கருத்தாளர்களுக்கு திருமயம் வட்டார வளமையத்திலும், 9-ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரிய கருத்தாளர்களுக்கு திருவரங்குளம் வட்டார வளமையத்திலும், 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஆசிரிய கருத்தாளர்களுக்கு அறந்தாங்கி வட்டார வளமையத்திலும் பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்லத்துரை, மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி. சத்தியமூர்த்தி, குணசேகரன், திராவிடச்செல்வம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம், கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த பயிற்சியில் 9-ம் வகுப்பு ஆசிரிய கருத்தாளர்கள் 90 பேரும், 6-ம் வகுப்பு ஆசிரிய கருத்தாளர்கள் 260 பேரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வருகிற 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 9-ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த கல்வி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலும், 6-ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலும் பாடவாரியாக மாநில அளவில் வெளியிடப்பட்டு உள்ள கால அட்டவணைப்படி 4 கட்டங்களாக பயிற்சி அளிக்க உள்ளனர். 

மேலும் செய்திகள்