பவானி அருகே மணல் கடத்திய லாரி-கொப்பரைகள் பறிமுதல்
பவானி அருகே மணல் கடத்திய லாரி மற்றும் கொப்பரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி,
பவானி தாசில்தார் சிவகாமி, மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் அலுவலர் மணிமேகலை, ஜம்பை கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் பவானி அருகே உள்ள குட்டமுனியப்பன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சேலம் மாவட்டம் தேவூரில் இருந்து லாரியில் மணலை கடத்திக்கொண்டு வந்து பவானி பகுதியில் விற்க முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பவானி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
இதேபோல் பவானி அருகே உள்ள திப்பிச்செட்டிபாளையம் பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக நேற்று முன்தினம் பவானி தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தாசில்தார் சிவகாமி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பிச்சென்றது. பின்னர் அங்கு மணல் கடத்தலுக்கு பயன்படுத்தக்கூடிய கொப்பரைகள் மற்றும் மணல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கொப்பரைகள் மற்றும் மணல் மூட்டைகள் அனைத்தும் பவானி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.