அந்தேரி ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்த விபத்துக்கு மும்பை மாநகராட்சியே பொறுப்பு ஐகோர்ட்டு கருத்து

அந்தேரி நடைமேம்பால விபத்துக்கு மும்பை மாநகராட்சியே பொறுப்பு என ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

Update: 2018-07-04 22:36 GMT
மும்பை, 

அந்தேரி நடைமேம்பால விபத்துக்கு மும்பை மாநகராட்சியே பொறுப்பு என ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

ராகுல்காந்தி விமர்சனம்

மும்பையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின்போது அந்தேரியில் உள்ள கோகலே ரெயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பல மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மும்பை மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே விபத்துக்குள்ளான பாலம் ரெயில்வேக்கு சொந்தமானதால் தாங்கள் அதற்கு பொறுப்பாக முடியாது என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சியே பொறுப்பு

இந்தநிலையில் மும்பை மாநகராட்சியில் உள்ள பாலங்களின் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பாட்டீல் மற்றும் குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தான் அந்தேரி நடைமேம்பாலம் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் ரெயில்வே மீது பழிசுமத்திவிட்டு பிரச்சினையை கைகழுவிவிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தள்ளிவைப்பு

மேலும் மாநகராட்சியில் உள்ள அனைத்து பாலங்களிலும் சோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் ஆகியோர் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்