மணப்பாறையில் ரெயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க.வினர் 54 பேர் கைது

மணப்பாறையில் ரெயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க.வினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-04 23:00 GMT
மணப்பாறை,

வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப் படும் பெரும்பாலான ரெயில்கள் மணப்பாறை ரெயில் நிலையத்தை கடந்து சென்று வருகின்றன. ஆரம்ப காலங்களில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது அனைத்து ரெயில்களும் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று சென்றன. அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு இந்த ரெயில் நிலையத்தில் பாண்டியன், குருவாயூர், நெல்லை இன்டர்சிட்டி ஆகிய விரைவு ரெயில்களை தவிர மற்ற விரைவு ரெயில்கள் நின்று செல்வதில்லை.

திருச்சிக்கு அடுத்தபடியாக மணப்பாறையில் தொழில் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் இந்த ரெயில் நிலையத்தில் திருப்பதி, வைகை, அந்தியோதயா உள்ளிட்ட விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ம.தி.மு.க.சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று மணப்பாறை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை. தமிழ்மாணிக்கம் தலைமையில் மாவட்ட செயலாளர் சேரன், ஒன்றிய செயலாளர் துரைராஜ், நகர செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே ஒன்று கூடி அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடியே ரெயிலை மறிக்க ஊர்வலமாக வந்தனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.

ரெயில்வே கேட் அருகே கட்சியினர் வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ம.தி.மு.க. மாணவரணியை சேர்ந்த பாஸ்கர், வேளாங்கண்ணி, தங்கவேல், மகேந்திரன், சரண்ராஜ் ஆகிய 5 பேர் பலத்த பாதுகாப்பையும் மீறி ஓடிச் சென்று புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ரெயிலை மறிக்க முயன்றதாக 5 வாலிபர்கள் உள்பட 54 பேரை மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி மற்றும் திருச்சி ரெயில்வே இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் மணப்பாறை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்